AimShreemHreem - Secret of Successful Peopl

AimShreemHreem - Secret of Successful Peopl
Click Here

Thursday, 23 August 2018

தரிசனம்

ஆதார தரிசனம்.

ஊணவே வாசிதனை மூலந்தன்னில்
ஓமென்று தானிறுத்தி உறுதிகொண்டு
பேணவே யிங்கென்று மவுனம்பூட்டி
பெருமையுள்ள ஓங்அங்சிவய நமவென்று
தோணவே தினம்நூறு உருவேசெய்தால்
சுத்தமுள்ள சுழினையிலே நந்திகாணும்
பூணவே நந்தியுட பிரகாசங் கண்டால்
பொருந்திநின்ற ஆதாரஞ் சித்தியாமே.
ஆமப்பா ஆதாரஞ் சித்தியானால்
ஆதார தேவதைகள் அப்போகாணும்
ஓமப்பா வென்றபிரண வத்தினாலே
ஒளிவிளக்காய் நின்றதொரு சோதிகாணும்
வாமப்பால் நிறைந்த பூரணத்திலேதான்
மகத்தான சோதிபஞ்ச வர்ணமாக
தாமப்பா தன்னிலையில் தானேகாணும்
தண்மையுடன் கண்டதெல்லாம் சித்தியாமே.

ஓம் என்று மூச்சை மூலாதாரத்தில் நிறுத்தி "யிங்"என்று மௌனமாக இருந்து "ஓங் அங் சிவய நம" என்று தினமும் நூறு உரு தொடர்ந்து செபித்து வந்தால் சுழிமுனையில் நந்தியினுடைய பிரகாசம் தெரியுமாம். அப்படி தெரிந்தால் அதுவே ஆதார தரிசனம் என்கிறார்.

இந்த ஆதார தரிசனம் சித்தியானால் ஆதார தேவதைகள் கண்களுக்கு தெரிவார்களாம், தனிமையில் இருக்கும் போதெல்லாம் ஒளிவிளக்குப் போல் சோதி தென்படுமாம். அந்த சோதியானது பஞ்ச வர்ண நிறத்திலே இருக்குமாம். இந்த பஞ்சவர்ண ஒளி தென்படத் தொடங்கினாலே இத் தரிசனத்தில் முழுமையாக சித்தியானதாக கொள்ளலாம் என்கிறார் அகத்தியர்.



ஆத்ம தரிசனம்!, அறிவு தரிசனம்!.


ஆத்மாவின் தெரிசனம்.

சித்தியுள்ள ஆதாரதெரிசனமுங் சொன்னேன்
சிவசிவா ஆத்துமாவின் தெரிசனத்தைக்கேளு
பக்தியுடன் கண்டமதில் அங்கெண்றூணி
பூரணமாய்வாசி தனைநிறுத்திக் கொண்டு
பக்தியுடன் சுழிமுனையில் வாசியேற
பாலகனே உங்கென்று மவுனம்பூட்டி
சுத்தமுடன் உங்கிலிநம் சிங்கென்று
சுருதிபெற தினம்னூறு உருவேசெய்யே.
செய்யப்பா உறுதிகொண்டு உருவேசெய்ய
செயமான திருவுருவாம் ஆதாரத்தில்
மெய்யப்பா சுழிமுனையின் பிரகாசத்தாலே
மெஞ்ஞான மூலவன்னி பிரகாசிக்கும்
மையப்பா மூலவன்னி பிரகாசத்தாலே
மந்திரகலை ஆத்துமா வென்றறிந்துகொண்டு
கையப்பா குவித்துனிதம் பணிந்துகொண்டால்
கருணைவளர் சீவாத்துமா கனியுந்தானே.

ஆதார தரிசனத்தில் சித்தியடைந்தவர்கள் "அங்"என்று மூச்சை தொண்டையில் நிறுத்தி "உங்"என்று மௌனமாக இருந்து "உங் கிலி நம் சிங்" என்ற மந்திரத்தை தினமும் நூறு தடவை செபித்து வந்தால் சுழிமுனையில் மூலவன்னி பிரகாசம் தெரியுமாம். அப்படி தெரிந்தால் ஆத்மாவானது மந்திரக்கலையை உணர்ந்து அறிந்து கொள்ளும் என்கிறார்.

அப்போது கைகுவித்து வணங்கி பணிவுடன் மந்திரக்கலையை முழுவதுமாய் உணர்ந்து தெளிவு பெறவேண்டுமாம். அப்படி தெளிவடைந்ததும் சீவாத்துமா முழுமை அடைந்து தெளிவு பெறுமாம், இப்படியாக ஆத்துமாவின் தெரிசனம் சித்தியாகும் என்கிறார்.

ஆத்மாவின் தரிசனத்தில் சித்தியடைந்தவர்கள் அடுத்த தரிசனமான "அறிவு தரிசனத்தை" பயிலலாம் என்கிறார் அகத்தியர். வாருங்கள் அதைப் பற்றி அகத்தியர் கூறியுள்ளதைப் பார்ப்போம்.


அறிவு தெரிசனம்.
தானென்ற ஆத்துமாவின் தெரிசனத்தைச் சொன்னேன்
சங்கையுடன் அறிவான தெரிசனத்தைக் கேளு
வானென்ற மூலமதில் உங்கென்றூணி
மவுனமென்ற பீடமதில் அங்கென்றிருத்தி
கோனென்ற விழியோகம் கொண்டுநல்ல
குறியறிய ஓம்நம சிவயவென்று
தேனென்ற ரசம்போலே உருவேசெய்தால்
தேவாதி தேவனென்ற பிர்மமாச்சே.

ஆச்சப்பா பிர்மமென்ற தார்தான் சொல்வார்
ஆதியென்ற சுழியினையிலே அக்கினியே தோன்றும்
பேச்சப்பா யிம்மூல வன்னிதன்னால்
பேரண்டம் சுத்திவர கெவுனமுண்டாம்
நீச்சப்பா வெகுநீச்சு மூந்நேயந்தம்
நிசமான அந்தமடா நெத்திக்கண்ணு
பாச்சப்பாக் கண்ணறிந்து வாசிகொண்டால்
பதிவான மவுனசித்து பலிக்குங்காணே.

முதல் இரண்டு தரிசனங்கள் சித்தியடைந்தவர்கள், "உங்" என்று மூச்சை மூலாதாரத்தில் நிறுத்தி "அங்" என்று மௌனமாக இருந்து கொண்டு "விழி யோகத்தில்" இருக்க வேண்டுமாம்.

அது என்ன விழி யோகம்?

கண்கள் மூடிய நிலையில் விழிகள் இரண்டினாலும் புருவ மத்தியை பார்த்தபடி இருப்பதுதான் விழி யோகம் எனப்படும்.

இந்த விழி யோக நிலையிலிருந்து கொண்டு "ஓம் நம சிவய" என்று தினமும் நூறு முறை செபித்துவந்தால் சுழிமுனையில் அக்கினி தெரியுமாம். அப்படி தெரிந்தால் கெவுனம் உண்டாகுமாம், அப்போது மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணை உணரமுடியுமாம். இதை உணர்ந்து அறிந்து மூச்சை அங்கு நிறுத்த மௌன சித்தும் சித்திக்குமாம் இதுவே அறிவு தெரிசனம் என்கிறார் அகத்தியர்.



மனோ தரிசனம்

முதல் மூன்று தரிசனங்களாகிய "ஆதார தரிசனம்", "ஆத்ம தரிசனம்", "அறிவு தரிசனம்" ஆகிய மூன்று தரிசனங்களில் சித்தி அடைந்தவர்களே இந்த நான்காவது தரிசனமாகிய மனோ தரிசனத்தை பயில வேண்டும் என்கிறார் அகத்தியர்.

வாருங்கள், மனோதரிசனம் பற்றி அகத்தியரின் மொழியில் என்ன கூறியிருக்கிறாரென பார்ப்போம்.

கானென்ற அறிவான தெரிசனந்தான் சொன்னேன்
கலங்காத மனமென்ற தெரிசனத்தைக்கேளு
வானென்ற பூரகத்தில் சிங்கொன்றூதி
மகத்தான சுழியினையிலே வாசிபூட்டி
பூனென்ற ஓம்அரிநம வென்றேதான்
புத்தியுடன் தினம்னூறு உருவேசெய்தால்
வானென்ற தேகம்வெகு குளிர்ச்சியாகும்
மகத்தான ஆனந்த மயமாந்தானே.
தானென்ற ஆனந்தம் தானேதானாய்
தன்மையுடன் நின்றநிலை தானேகண்டு
வானென்ற கேசரியில் மவுனம்பூட்டி
வரிசையுடன் அண்டகேசரத்தில் சென்றால்
யேனென்ற மனோன்மணிதான் முன்னேநின்று
யின்பரச அமுர்தமது யிவாள்மைந்தா
வீணென்று தெரிசனத்தை விட்டாயானால்
வேதாந்த மவுனமதுக் குறுதிபோச்சே.

குருவருளை வேண்டி வணங்கி மௌனமாக இருந்து "சிங்"என்று மனதை பூரகத்தில் நிறுத்தி, மூச்சை சுழிமுனையில் நிறுத்தி "ஓம் அரி நம" என்று தினமும் நூறு முறை செபித்துவரவேண்டுமாம். அப்படி செபித்து வந்தால் உடல் குளிர்ச்சியாகுவதுடன், மனமானது மிகவும் ஆனந்த நிலையில் இருக்குமாம்.

இவ்வாறு மனம் ஆனந்த நிலையில் இருக்கும் போது கேசரியில் மௌன நிலையை கைக்கொண்டால் மனோன்மணித் தாயின் தெரிசனம் கிடைக்குமாம். மனோன்மணி தாயின் தெரிசனம் கிடைத்தவுடன் மனமானது அனைத்தும் சித்தித்ததாக எண்ணுவதுடன், இனி தெரிசனம் எதுவும் கிட்டதேவையில்லை, இதுவே இறுதி தரிசனம் என்றும் நினைக்கவும் தோன்றுமாம். இதுவே மனோ தரிசனம் சித்தியடைந்த நிலையாக கூறுகிறார்.

இந்த மனோ தரிசனமே போதும் என நினைத்து மிச்சமிருக்கும் தரிசன முறைகளை பயிலாமல் விட்டுவிட்டால் இது வரை பெற்ற நான்கு தரிசன சித்துக்களும் வீணாகி விடுமாம். எனவே பதினாறு தரிசனங்களையும் தொடர்ந்து பயின்று சித்தியடைவதே முக்திக்கு வழி என்கிறார் அகத்தியர்.



மௌன தரிசனம்

முதல் நான்கு தரிசனங்களில் சித்தியடைந்தவர்கள் மட்டுமே இந்த முறையினை பயில வேண்டும் என்கிறார் அகத்தியர். மௌன தரிசனம் பற்றி அகத்தியர் பின் வருமாறு விவரிக்கிறார்.


உறுதியுள்ள மனமடங்குந் தெரிசனமுஞ் சொன்னேன்
உகந்துமன மடங்கினதோர் தெரிசனத்தைக்கேளு
பரிதிமதிமேற் சுடரறிந்து மவுனம்பூட்டி
பக்தியுடன் வாசிதனை வங்கென்றூணி
திருகுசுழி முனையதிலே சிங்கென்றோட்டி
தீர்க்கமுடன் தானிருந்து குருவைப்போற்றி
உறுதியுடன் சிங்குசிவாயென்றோத
உண்மையுள்ள மௌன தெரிசனமுமாமே.
ஆமப்பா தெரிசனத்தை யென்னசொல்வேன்
அதியென்ற தேகமதில் அக்கினிகொண்டேறும்
காமப்பால் கானப்பால் கனிந்தமுர்தமூறும்
கண்ணறிந்து மவுனமதாய் கனிவாய்நின்று
வாமப்பா லுருதியியனால் வரைகள்தாண்டி
மகத்தான சுழினைவழி வாசல்சென்று
தாமப்பா தனன்றிவே சாட்சியாக
தன்மயமும் விண்மயமும் தானாய்நில்லே.

இதுவரை சித்தியடைந்த தரிசனங்கள் மூலமாக சூரிய சந்திரர்களை விட சிறப்பான ஒளியை தரிசித்ததை மௌனமாக மனதில் உள்வாங்கி மூச்சை "வங்"என்று ஊன்றி, பின்னர் அந்த முச்சை சுழிமுனையில் "சிங்"என்று செலுத்தி குருவருளை வணங்கி வேண்டி "சிங்கு சிவா"என்று தினமும் நூறு முறை செபித்து வரவேண்டுமாம்.

இவ்வாறு தொடர்ந்து செபித்துவர உடலில் அக்கினி ஏறுமாம். அப்போது காமப்பால், கானப்பால், கனிந்தாமிர்தம் ஆகியவை ஊறுமாம். அப்போது அதை உணர்ந்து மௌனமாக இருந்தால், ஊறிய இம் மூன்றும் சுழிமுனை வாசல் வரை செல்லுமாம். அப்போது ஆகாயம், பூமி எங்கும் நீக்கமற பரந்து விரிந்து நிற்கும் பிரம்மம் நானே என்று உணரும் நிலை சித்திக்குமாம்.இதுவே மௌன தெரிசனமாகும் என்கிறார் அகத்தியர்.

உள்ளமென்ற தரிசனம்

சித்தர்கள் அருளிய ஆறாவது தரிசனமாகிய உள்ளமென்ற தரிசனம் பற்றி இன்று பார்ப்போம். முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டதைப் போல முதல் ஐந்து தரிசன சித்தி அடைந்தவர்களே இந்த உள்ளமென்ற தரிசனத்தை பயில வேண்டும். இந்த தரிசனம் பற்றி அகத்தியர் பின் வருமாறு விவரிக்கிறார்.


நில்லென்று மனதடங்கும் தெரிசனமும் சொன்னேன்
நிசமான புலத்தியனே யின்னங்கேளு
ஊனென்ற உள்ளமதின் தெரிசனத்தைச் சொல்வேன்
உத்தமனே சற்குருவைத் தியானம்பண்ணி
சொல்லென்று வாசிதனை வங்கென்றெழுப்பி
தீர்க்கமுடன் உங்கென்று மவுனம்பூட்டி
செல்லென்று அங்கிலிவசி வசியென்றோத
துலங்குமடா மகேஸ்பரத்தின் தெரிசனந்தான்காணே.
காணவே மயேசரத்தின் தெரிசனந்தான் மைந்தா
கருணையுடன் காணவே அரிதாம்பாரு
பூணவே புருவமப்பா சுழினைக்குள்ளே
பொருந்திநின்று வந்ததொரு வாசிதானும்
தோணவே துலங்கி நின்று அசவையாகி
சொல்நிறைந்த மந்திரமு மதுவேயாக
ஊணவே மவுனமது குருதியாகி
உள்வெளியாய் நின்றுதடா உகந்துபாரே.

குருவருளைத் தியானம் செய்து மூச்சை "வங்" என்று ஊன்றி, பின் "உங்" என்று மௌனமாக இருந்து கொண்டு "அங்கிலி வசி வசி" என்று தினமும் நூறு முறை செபித்து வரவேண்டுமாம்.

அப்படி செபித்து வரும்போது காண்பதற்க்கு மிகவும் அரியதான மகேஸ்பரத்தின் தெரிசனத்தை காணலாமாம். அப்போது சுழிமுனையுடன் பொருந்தி வரும் மூச்சானது அதுவே மந்திரமாகவும், மௌன நிலையாகவும் உடலில் ஓடும் இரத்தம் போல் ஒன்றி உள் வெளியாய் இருக்கும் நிலையை உருவாக்குமாம்.

இதையே உள்ளமென்ற தெரிசனமாகும் என்கிறார் அகத்தியர்



பூரண தரிசனம், நாசி நுனி தரிசனம்!

பூரண தரிசனம்..

இது வரை பகிர்ந்து கொண்ட முதல் ஆறு தரிசனங்களை பெற்று சித்தியடைந்தவர்கள் இந்த ஏழாவது தரிசனமான பூரண தரிசனத்தை பயில வேண்டும். இந்த தரிசனம் பற்றி அகத்தியர் பின் வருமாறு விவரிக்கிறார்.

பாரப்பா உள்ளமென்ற தெரிசனந்தான்சொன்னேன்
பதிவான பூரணமாந் தெரிசனத்தைக்கேளு
நேரப்பா வங்கென்று வாசிதனையெழுப்பி
நிலையான சுழினையிலே அங்கென்றிருத்தி
காரப்பா ஓம்றீங் கிலிமங்கென்று
கருத்துறவே னூற்றெட்டு உருவே செய்தால்
தேரப்பா அண்டமெனும் சுழினைக்குள்ளே
தீர்க்கமுடன் சதாசிவனார் தெரிசனையாங்காணே.
காணவே அரிதாகும் தெரிசனந்தான் மைந்தா
கற்பூர தீபமதின் காந்திதன்னை
பேணவே மனம்பூண்டு காந்திதன்னால்
பேசாத மவுனரச பானமுண்டால்
தோணவே மவுனரச பானங்கொண்டால்
துலங்குமடா சிவயோகம் சுத்தமாக
ஊணவே தானிருந்து மவுனம்பூட்டி
ஓடிநின்று வாசியது ஒடுக்கமாச்சே.

"வங்" என்று மூச்சை எழுப்பி சுழுமுனையில் "அங்" என்று நிறுத்தி, மௌனமாக இருந்து "ஓம் றீங் கிலி மங்" என்ற மந்திரத்தை தினமும் நூறு முறை செபித்து வந்தால் சுழிமுனையில் சதாசிவனார் தரிசனம் காணக் கிடைக்குமாம். அப்படி தெரிந்தால் பூரண தெரிசனம் சித்தியாகுமாம்.

மேலும் இந்த தரிசனதில் கற்பூர தீபம் போன்ற ஒளியும் தென்படுமாம், அப்போது வாசியானது ஒடுக்கமாகுமாம். அத்துடன் மௌன ரச பானம் சுரக்கும் அதை உணர்ந்தால் சிவயோகம் தெளிவாகவும், முழுமையாகவும் சித்திக்குமாம் என்கிறார் அகத்தியர்.


நாசினுனி தரிசனம்..
சித்தர்களின் தரிசன வகைகளில் எட்டாவது தரிசனமான நாசி நுனி தரிசனம் பற்றி பார்ப்போம். இதை அகத்தியர் பின் வருமாறு விவரிக்கிறார்.


ஒடுக்கமுடன் பூரணமாம் தெரிசனத்தைச் சொன்னேன்
உண்மையென்ற னாசினுனி தெரிசனத்தைக்கேளு
அடுக்கநடு மனைதனில் வங்கென்றிருத்தி
ஆதியென்ற சுழிமுனையில் சிங்கென்றிருத்தி
தொடுத்துமிக சிவயவசி அம்மங்கென்று
சுத்தமுடன் னூற்றெட்டு உருவேசெய்தால்
நடுத்தமரில் னாகாந்த சோதிதொன்றி
நாலான காரியமும் நன்மையாமே.
நன்மையுடன் னாசினுனி னாட்டம்பாரு
நாதாந்த பூரணமாய் சுழினைக்கேத்தி
உண்மையென்ற வாசியிலே உகந்துநில்லு
தன்மையுடன் உலகமதில் தானேநின்று
சகலஉயிர் தாபரமும் தானேதானாய்
சின்மயமாய்த் தானிருந்து தெளிந்துகொண்டால்
சிவசிவா மவுனமது தீர்க்கமாமே.

புருவ மத்தியில் மனதை நிறுத்தி "வங்" என்று மூச்சை எழுப்பி சுழுமுனையில் "சிங்" என்று நிறுத்தி மௌனமாக கண்களால் நாசி நுனியை நோக்கியவாறு இருந்து "சிவயவசி அம் மங்"என்று தினமும் நூறு முறை செபித்துவந்தால் புருவ மையத்தில் காந்த ஜோதி தெரியுமாம். அப்படி தெரிந்தால் நாசினுனி தெரிசனம் சித்தியாகியதாக கொள்ளலாமாம்.

அப்படி நாசிநுனி தெரிசனம் சித்தியானால் சகல உயிர்களிலும் பரம்பொருளே நிறைந்திருக்கிறது என்றும், அந்த பரம்பொறுளிலில் தானும் அடக்கம் என்றும் உணர முடியுமாம். அத்துடன் மவுன சித்தும் சித்திக்குமாம் என்கிறார் அகதியர்.



புருவ மைய்ய தரிசனம்

இது வரை நாம் பார்த்த தரிசனங்களில் இருந்து கொஞ்சம் மாறுதலான தரிசனம் ஒன்றை இன்று பார்ப்போம். முந்தைய தரிசனங்களை நமக்கு வசதியான எந்த இடத்திலும் செய்யலாம். ஆனால் இந்த புருவ மைய்ய தரினத்தை சதுரகிரி மலையில்தான் செய்திட வேண்டுமென்கிறார் அகத்தியர். இதற்கான பிண்ணனி குறித்த தகவல்கள் ஏதும் குறிப்பாக இல்லை.

வாருங்கள் இந்த தரிசனம் பற்றி அகத்தியர் சொல்வதை பார்ப்போம்.

பாரப்பா நானினுனி தெரிசனமுஞ்சொன்னேன்
பரிவான புருவமய்யத் தெரிசனத்தைக்கேளு
நேரப்பா மனம்நிறுத்தி மவுனம்பூட்டி
நேர்மையடன் சுழினையிலே மனக்கண்சாற்றி
காரப்பா கனிந்தமனங் கொண்டு மைந்தா
கருணையுடன் நின்றுதவம் செய்தாயாகில்
மேரப்பா வளமானசதுரகிரி சென்றுதானே
மெஞ்ஞான சோதிசிவ சோதியாமே.
சோதியென்ற ஆதியடா சுழினைக்கம்பம்
சுயஞ்சோதி யானசிவ ஞானதீபம்
ஆதியென்ற தீபமடா ஆத்துமாவாகும்
நிலையான தீபமடா பரமாய்நிற்கும்
சாதியென்ற வன்னியடா ஆவிதன்னை
தனையறிந்து சோதியாம் தன்னில்சேரே
ஆரப்பா அறிவார்கள் ஆதியந்தம்
அடங்கிநின்ற பரசுரூபம் வெளிதானாச்சே.

சதுரகிரி சென்று மனதை ஒரு நிலைப்படுத்தி சுழிமுனியில் மனதை நிலை நிறுத்தி தவம் செய்திட வேண்டுமாம். அப்போது சிவ சோதி தரிசனம் காணலாமாம். இந்த சோதியுடன் தன்னை அறிந்து ஒரு நிலைப்பட்ட மனதையும் இணைக்க ஆதி அந்தம் தெரிய வருவதுடன், பரசு ரூபமும் தெரியவரும் என்கிறார் அகத்தியர்.

இந்த முறைக்கென மந்திரங்கள் ஏதும் குறிப்பிடப் படவில்லை, மாறாக முந்தைய தரிசனங்களில் கிடைத்த சித்தியானது இந்த தரிசனத்திற்கு உதவும் என கொள்ளலாம்.



பிரமவெளி தரிசனம்.


குருவின் வழி காட்டுதலோடு புருவ மைய தரிசனம் வரை சித்தியடைந்தவர்கள் இந்த பிரம வெளி தரிசனத்தை பயிலலாம். இந்த முறை பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.


ஆச்சப்பா புருவநடு தெரிசனமும் சொன்னேன்
அரகரா பிர்மவெளி தெரிசனத்தைக்கேளு
பேச்சப்பா பெருகிநின்ற மூலந்தன்னில்
பிரணவத்தால் வாசிதனை மேலேனோக்கி
பாச்சப்பா மவுனமதில் ரீங்கென்றிருத்தி
பதிவான சுழிமுனையை பத்திப்பார்க்கில்
மூச்சப்பா நிறைந்ததிரு ஆறாதாரம்
முடிவில்லா பரமவெளி காந்தியாச்சே.
காந்தியென்ற பரமவெளி காந்திதன்னை
கனிவான கண்ணறிந்து ஆர்தான்காண்பார்
பாந்தியமாய் பரமவெளியை பதிவாயப்பார்த்தால்
பஞ்சவர்ண அஞ்சுநிலை தானேதோணும்
சாந்தமுடன் அஞ்சுநிலை தன்னைப் பார்த்தால்
தன்மயமும் விண்மயமும் அதுவாய்ப்போச்சு
நேர்ந்துமிக பூரணமாய் மவுனங்கொண்டால்
நிசமான மவுனகுரு னாதனாச்சே.


ஓம் என்ற பிரணவத்தின் உதவியுடன் மூச்சை மேல் நோக்கி செலுத்தி பின் மௌனமாக "ரீங்"என்று சுழுமுனையில் ஊன்றி மனக்கண்ணால் பார்த்தால் இந்த தரிசனம் சித்தியாகுமாம்.

அப்படி இந்த தெரிசனம் சித்தியானால் அப்ஞ்சவர்ணம் தெரிவதுடன், ஐந்து நிலைகளும் தெரியுமாம். அப்போது தன்மயமும் விண் மயமும் தானே என்று உணரும் மௌன நிலை சித்திக்கும் என்கிறார்.

இந்த மௌன நிலை சித்தித்தவர்களே மௌன குருவாக விளங்க முடியும் என்கிறார் அகத்தியர். ஆக, இதன் மூலம் மௌன குரு என்பவர் யார் அவரின் சிறப்பு எத்தகையது என்பதை இந்த தரிசன முறை நமக்கு உணர்த்துகிறது.



ஒளி தரிசனம், விந்து தரிசனம்.

தரிசனங்கள் என்பது ஒரு வகையான அனுபவ நிலை. அவற்றை வார்த்தைகளினால் விவரிப்பதை விட அனுபவித்து அறிவதே சிறப்பு. அனுபவம் என்பது முயற்சி மற்றும் பயிற்சியினால் மட்டுமே சாத்தியமாகும். ஆகக் கூடிய பொறுமை மற்றும் நிதானத்தோடு இவற்றை பயிலும் எவருக்கும் தரிசனம் சாத்தியம். இத்தகைய தரிசனங்களை பெற்றவர்களை நான் அறிவேன் என்பதால் இந்த கருத்தினை வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன்.

வாருங்கள் ஒளி தரிசனம் பற்றிய அகத்தியரின் பாடலைப் பார்ப்போம்.


ஒளி தரிசனம்..

ஆச்சப்பா பரமவெளி தெரினமுஞ்சொன்னேன்
அருள்நிறைந்த ஒளியினுட தெரிசனத்தைக்கேளு
காச்சப்பா அங்கென்று கண்டமதில்யிருத்தி
கருணைவளர் உச்சியிலே சிம்பென்றுரேசி
பாச்சப்பா யிப்படியே பிராணாயஞ்செய்தால்
பரமவெளி தன்னிலொளி பளீரெனவேதோணும்
மூச்சப்பா நின்றநிலை ஆரறியப்போறார்
முத்திகொண்ட சுழினையடா சந்தியந்தான்பாரே.
ஆதி தரிசனமான ஆத்மாவின் தரிசனம் துவங்கி பிரம தரிசனம் வரை வாய்க்கப் பெற்றவர்களே இந்த ஓளி தரிசனத்தை பயில வேண்டுமாம். கவனக் குவிப்புடன் மௌனமாய் இருந்து "அங்"என மனதை கண்டத்தில் நிலை நிறுத்தி மூச்சினை "சிம்" என உச்சியில் ஏற்றி பிராணயாமம் செய்திட வேண்டுமாம். அப்படித் தொடர்ந்து செய்து வருகையில் பரம ஒளியானது பளீர் என தோன்றும் என்கிறார் அகத்தியர். இதுவே ஒளி தரிசனம் ஆகும்.

இந்த ஒளி தரிசனத்தை தரிசிக்கப் பெற்றவர்கள் அடுத்த தரிசனமான விந்து தரிசனத்தை பயில வேண்டும். இதைப் பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

விந்து தரிசனம்..
பாரப்பா ஒளியினிட தெரிசனமும் சொன்னேன்
பதவின விந்தினிட தெரிசனத்தைக்கேளு
சாரப்பா கேசரியில் மனதைனாட்டி
தமரான அணுவாசல் தன்னில்நின்று
நேரப்பா கண்ணடங்க மவுனம்பூட்டி
நேர்மையுடன் தானிருந்து றீங்கென்று
காரப்பா வாசியை நீமேலேனாக்கி
கருணையடன் சுழினையிலே நிசமென்றுநில்லே.

நில்லடா சிம்மெனவே வாசிகொண்டு
நிலையான தமரதிலே வாசியேத்து
வில்லடா விசைபோலே வாசியேத்து
விபரமுடன் யிறங்குதுறை அறிந்துகொண்டு
செல்லடா தமரதிலே நின்றுபார்த்தால்
சிவசிவா பூரணசந் திரனேகாணும்
உள்ளடா பூரணசந்திரனைக் கண்டால்
உறுதியுடன் சிருஷ்டிதிதி சங்காரமாமே.

குருவருளை தியானித்து மௌனமாக இருந்து கேசரியில் மனதை நிறுத்தி, "றீங்"என்று அணுவாசல் தன்னில் மூச்சை ஒன்று சேர்த்து மேல் நோக்கி செலுத்தி இறங்குதுறை அறிந்து பார்த்தால் பூரண சந்திரன் தென் படுமாம். இந்த பூரண சந்திரக் காட்சியைக் கண்டால் சிருஷ்டி, திதி, சங்காரம் என்னும் மூன்றும் சித்திக்குமாம் இதுவே விந்து தெரிசனம் என்கிறார் அகத்தியர்.



நாத தரிசனம்

அகத்தியர் அருளிய பதினாறு தரிசனங்களில் இனி வர இருக்கும் தரிசனங்கள் கொஞ்சம் சிக்கலானவை. அவற்றை வார்த்தைகளினால் எந்த அளவுக்கு விவரிக்க முடியுமென தெரியவில்லை. இவை பெரும்பாலும் குருவினால் சீடருக்கு உணர்த்தப் பட வேண்டியவை என்பதால் என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் இந்த தரிசன விவரங்களை இங்கே பகிர முயற்சிக்கிறேன்.

வாருங்கள், விந்து தரிசனம் பற்றி அகத்தியர் அருளியிருப்பதை பார்ப்போம்.


ஆமப்பா விந்தினிட தெரிசனமுஞ்சொன்னேன்
அருள்பெரு நாதமதின் தெரிசனத்தைக்கேளு
தாமப்பா தன்னிலையை தானேகண்டு
சங்கையுடன் விபூதி தூளிதமேசெய்து
சோமப்பால் கொண்டுபரி பூரணமாய் நின்றால்
சொல்நிறைந்த சுவாசமது பாழ்போகாமல்
நாமப்பா சொல்லுகிறோம் மவுனம்பூட்டி
நாதாந்தத் தமர்வாசல் திரையைநீக்கே.
நீக்கியந்த கேசரியில் மனத்தைநாட்டி
நிலையறிந்து ஓம்வசியென்று மைந்தா
தாக்கிநின்றாய் ரேசகபூரண மாய்நிற்க
தன்மையுடன் வாசியது உண்மையாகும்
போக்குவரத் தாகிநின்ற வாசிமைந்தா
பொருந்தி நின்றதமரதிலே யடங்கினாக்கால்
வாக்குமன தொன்றாகி மனதுகூர்ந்து
மகத்தான கேசரியில் சோதியாமே.

தன் நிலையை தானே கண்டுணர்ந்து தெளிவாக வீபூதி துளிதம் செய்து பின்னர் மனதை பூரணமாக நிலை நிறுத்தினால் சுவாசம் வீணாக போகாது. அப்போது மௌனமாக"ஓம்வசி"என கேசரியில் மனதை நிலை நிறுத்த நாதாந்த தர்ம வாசலின் திரை நீங்கி தரிசனம் காண கிடைக்குமாம்.

அப்படி தரிசனத்தை காணும் போது கேசரியில் சோதி தோன்றுமாம். மேலும் இந்த தரிசனங்கள் படிக்கும் போது புரியாமல் இருந்தாலும் வரிசை முறைப்படி செய்து வரும் போது சிறப்பாக உணரமுடியும் என்றும் சொல்கிறார்.



உருவ தரிசனம், அரூப தரிசனம்

அகத்தியர் அருளிய பதிறாறு தரிசனங்களில் இன்று பதினான்கு மற்றும் பதினைந்தாவது தரிசனம் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம். இவை முறையே "உருவ தரிசனம்", "அரூப தரிசனம்" என்றழைக்கப் படுகிறது.

உருவ தரிசனம்..

சோதியென்ற னாதாந்த தெரிசனமுஞ்சொன்னேன்
சுரூபமென்ற உருவமதின் தெரிசனத்தைக்கேளு
ஆதியென்ற கோமுகஆசான மேல்க்கொண்டு
அப்பனே விபூதி தூளிதமேசெய்து
நீதியென்ற வாமமதால் மவுனம்பூட்டி
நின்றிநிலை தமர்வால் திரையை நீக்கி
ஓதியதோர் பிரணவத்தால் உள்ளேசென்றால்
உள்ளொளியும் வெளியொளியும் மொன்றாய்ப்போமே.
ஒன்றாகி நின்றபொருள் தானேதானாய்
உத்தமனே அட்டசித்துந் தானேயாகும்
நன்றான ரவிமதியுஞ் சொன்னபடிகேக்கும்
நாட்டமுடன் யிகபரமும் நன்மையாகும்
நின்றாடும் வாசியினால் மவுனங்கொண்டு
நெறியான தமரதிலே வாமாகி
நேராத மவுனரசங் கொண்டாயானால்
குருவான தேசியடா வாசியாமே.

முந்தைய பதின்மூன்று தரிசனங்களில் சித்தியடைந்தவர்கள் மட்டுமே இந்த தரிசன முறையினை பின் பற்றி பயில வேண்டும். கோமுக ஆசனத்தில்* அமர்ந்து இருந்து கொண்டு வீபூதி துளிதமிட்டு கவனக் குவிப்புடன் ஆழ்ந்த மௌனமாக இருந்து பிரணவ மந்திரமான"ஓம்" என்ற மந்திரத்தை செபித்து வர உள் ஒளியும், வெளி ஒளியும் ஒன்றாக இணைவதை தரிசிக்கலாமாம். இதுவே உருவ தெரிசனம் என்கிறார் அகத்தியர்.

இத்தகைய உருவ தரிசனத்தை பெறுகிறவர்களுக்கு அட்டமா சித்துக்களும் சித்திப்பதுடன், இக பரமும் தெளிவாக விளங்கும் என்கிறார் அகத்தியர்.

*ஆசனங்கள் பற்றி சித்தர்கள் அருளிய தகவல்களை கூடிய விரைவில் விளக்கப்படங்களுடன் எழுதுகிறேன்.
அரூப தெரிசனம்..

உருவ தரிசனம் வரையிலான அத்தனை தரிசனங்களை பெற்றவர்கள் இந்த அரூப தரிசனத்தை பயிலலாம். இது பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.


வாசியென்ற உருவதுவே பொருளென்றெண்ணி
மனதுபரி பூரணமாய் பூசைசெய்து
தேசியென்ற அருவமதின் தெரிசனத்தைக்கேளு
திருகுமணி வாசிலிலே மவுனம்பூட்டி
நாசினுனி சுழினை வழிதமருக்குள்ளே
வாசி ஊடுருவ நாட்டங்கொண்டு
ரேசிவாசிம் மெனவே வாசியாதி
நின்னகமும் விண்ணகமும் ஒன்றாங்காணே.
ஒன்றான காட்சியடா அரூபமாச்சு
உத்தமனே அரூபமென்ற காட்சிதன்னை
அண்டகேசரி யெனவே அமர்ந்துகொண்டு
அனுதினமும் பிராணதாரகமாய் நின்றால்
குன்றாத சமாதியடா சோதியாச்சு
குருவான சோதியிலே கூர்ந்துகொண்டால்
நன்நான பதவியடா சாயுச்சியபதவி
நாதாந்த பதவியென்ற அரூபமாச்சே.

கேசரி யோகத்தில் அமர்ந்திருந்து கொண்டு திருகுமணி வாசலிலே மௌனமாக உற்று நோக்கி. நாசிநுனி சுழினை வழியாக மூச்சு செல்லும் போது மனதும் விண்ணும் ஒன்றாய் இருப்பதை ஊணர முடியுமாம். அந்த ஒன்றாக இருப்பது அரூப காட்சியாக தென்படுமாம். இந்த காட்சியை தரிசித்த படி பிரணாயாமம் செய்துவந்தால் சாயுச்சிய பதவி கிடைப்பதுடன் சமாதி நிலையும் சித்திக்குமாம் என்கிறார் அகதியர்.

சாயுச்சிய தரிசனம்.

சாயுச்சிய தரிசனம் பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.


அரூபமென்ற தெரிசனங்கள் பதினைந்திற்க்கும்
இறுதிநிலை தெரிசனந் தான்மவுனபீடம்
சுரூபமென்ற சோதியிலே மனக்கண்சாத்தி
சுத்தமுடன் அந்தரத்தில் மணிநாவுன்னி
அரூபமென்ற தெரிசனங்கள் யீரட்டுந்தான்
அங்கசனையே தோணுமடா அமர்ந்துபாரு
ரூபமென்ற சோதியிலே அமர்ந்துபாரு
துலங்குமடா நினைத்தவண்ணஞ் சோதிதானே.
தானான சோதியடா உச்சிமூலம்
தனையறிந்து வாசியடா மவுனபீடம்
கோனான சுழினையடா நந்நதிக்கம்பம்
குருவான மூலமடா ஓங்காரந்தான்
வானான வட்டமடா கபாடவாசல்
வரையறிந்து திரையகத்தி மவுனங்கொண்டால்
தேனான அமுர்தரசந் தெளிவுகாணும்
தெளிவான ஒளிவரிந்து வெளியைக்காணே.

மௌனமாக அமர்ந்திருந்து சுரூபம் என்ற சோதியை மனக்கண்ணில் பார்க்க, இதற்க்கு முன் தரிசித்த பதினைந்து தரிசனங்கள் அனைத்தையும் ஒன்றாக அங்கு தரிசிக்கலாமாம். அப்படியே அமர்ந்து அதைத் தரிசித்தால் அனைத்தும் ஒன்றாகி ஒரே சோதியாக தெரியுமாம். அப்படி அந்த சோதியை தரிசித்து கொண்டே ஓங்கார மந்ந்திரமான "ஓம்" என்று மனதால் உச்சரிக்க வட்டமான கபால வாசல் திறக்குமாம். அப்போது இந்த சோதி தரிசன நிலையைக் கடந்து அண்ட வெளி ரகசியத்தை முற்றாக உணரலாமாம். இதுவே இறுதி நிலையாகும் என்கிறார் அகத்தியர்.


No comments:

Post a Comment